Welcome to our site.!!

Saturday, 7 May 2011

அன்புள்ள அப்பாவுக்கு !


அன்புள்ள அப்பாவுக்கு , 
ஆச்சரியமாய் பார்க்காதே என் அப்பா, 
உண்மையாக நான் உனக்கு எழுதிய கடிதம் தான்.... 


தொலைபேசியில் அம்மாவிடம் மட்டும் 
ஆசைதீர பேசுபவன் 
உன்னிடம் பேசியதில்லை 
உன்னை விசாரித்ததும் இல்லை 
உன் மனதிலுள்ள இந்த கவலைகள் புரியாமலில்லை எனக்கு.... 

எப்போது என்னைக்கண்டாலும் உர்ர் என்று மாறும் 
உனது கோபப் பார்வை , 
இப்போதும் என் கண்முன்னே வந்து 
கலங்க வைக்கிறது அப்பா..... 

அது உண்மை கோபம் அல்லவே 
பொய் கோபம் தான் என உணராத மடையனானேன் நான். 
உணர்ந்தபடியால் தான் இந்த கடிதம் உனக்கு அப்பா..... 

எல்லா குழந்தையின் சிறுவயது கதாநாயகன் 
தன தந்தையே... 
எனக்கும் நீதான் அந்த கதாநாயகனே அப்பா.... 

அம்மா சிறுவயதில் என்னிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள்,,,, 
நீ என்னை தோளில் தூக்கி கடைக்கு செல்ல 
`அப்பா டேய் மிட்டைவாங்கிதாடா ` என நான் 
அதிகாரமாய் பேசுவதை கேட்கவே 
ஆவலில் துடிப்பாயாம் நீ அப்பா.... 

பயந்தவன் சாதிப்பது கடினம் 
நீச்சல் கற்றுத்தர என்னை ஆற்றுக்கு அழைத்து சென்று நட்டாற்றில் விட்டு விட்டு 
நான் பதறிய பின் தொளில்தூக்கி கரை ஏற்றிய- 
நீ என்னிடம் கூறிய வாக்கியம் தான் அது அப்பா.. 

அந்தவார்த்தை வெறும் வார்த்தை அல்ல 
அதுவே என் வாழ்கையின் மந்திரம் ஆனதே 
வார்த்தையில் கூட வந்ததில்லை அந்த பயம் அப்பா.... 

மிதிவண்டி கற்றுத்தந்தது முதல் கிரிகெட் மட்டை, துப்பாக்கி,இசைக்கருவிகள் வரையிலும் நான் நினைக்கும் முன்னரே என் கையில் தந்தவர் 
என் அப்பா... 

ஆனால் நான் விரும்பிய கல்வியை மட்டும் எனக்கு அளிக்கவில்லை நீ 
காரணம் நீ அல்ல நமக்கு வந்த விதி அப்பா.. 

எங்கு சென்றாலும் உன் கைப்பிடித்து நடக்கவே விரும்புபவன் நான் நமக்குள் இந்த இடைவெளி வந்தது எப்படி அப்பா... 

அதையும் நான் கூறுவேன் அமைதியாக கேள் அப்பா,,,, 

தம்பி என்று ஒருவன் வந்ததும் 
தனிமயாக்கப்பட்டதாய் உணர்ந்தேன் 
நான் கேட்ட பொருள் அவனுக்கு கிட்டியதால் 
கடும் கோபம் அடைந்தேன் 
உன் தோளில் எனக்கிருந்த இடம் அவனதானதால் 
பெரும் வெறுப்பு கொண்டேன் ..... 
அந்த புரியாத வயதில் இதை எல்லாம் தெரியாதது என் தவறா அப்பா..... 

ஆணோ பெண்ணோ மூத்ததாய் பிறந்த எல்லா 
முதல் குழந்தைக்கும் வருகின்ற 
மனநோய் தான் அது என்று நான் அவ்வயதில் 
அறிவேனோ அப்பா.. 

இன்று வரை நீ என்னை அடித்ததில்லை 
அடித்திருந்தால் கூட நான் மறந்திருப்பேன் 
நீ திட்டிய வார்த்தைகள் இன்றும் மறப்பதில்லை என் அப்பா..... 

வாலிபப்பருவம் நான் வரவர நமக்குள் 
இடைவெளிப் பருவமும் அதிகமாய் வந்த 
காரணமென்ன என் அப்பா.... 

சிறுபருவத்தில் பலருக்கு கடையில் நான் 
வாங்கித்தந்த சிகரெட் 
பருவம் மாறியதும் நான் வாங்கிக்கொடுத்தது 
உன் மனதிற்கு எனக்காய் வாங்கியதாக தோன்றியதோ அப்பா...

மதுக்கடையில் நான் மாற்றிய சில்லறை 
உனது நண்பர்கண்ணுக்கு மதுபானமாய் 
தோன்றியதோ அப்பா... 

செய்யாத இதுபோன்ற தவறுகளை நான் 
செய்ததாய் நீ திட்டியதால் 
செய்யாத அந்த தவறுகளை 
செய்தால் என்ன என்று என் மனது 
செய்யத்தூண்டியது இயல்புதானே அப்பா... 

யார் என்னைப்பற்றி என்னகூறினாலும் 
அதை முழுதாய் நம்பிய நீ 
நான் சொல்வதை மட்டும் நம்பாமல் போனது 
என் குற்றமா என் வயதின் குற்றமா 
அதன் பதிலை உன்னிடமே விட்டுவிட்டேன் 
என் அப்பா... 

நான் பொய் சொன்னாலும் நம்பும் அம்மா 
உண்மையை சொன்னாலும் நம்பாத நீ 
என்னைப்பற்றி எப்பொழுதும் உன்னிடம் 
குறைகூறும் தம்பி அனால் அவனிடம் நான் காட்டும் பாசம் உண்மை யாரை நம்புவேன் 
நீயே கூறிவிடு அப்பா... 

எனக்கு கிட்டாத கல்லூரி வாழ்வு 
தம்பிக்கு கிட்டியதால் மகிழ்ந்தேனே ஒழிய 
பொறமை என்பது என் மனதளவிலும் இல்லை 
இருந்தும் அவன் தவறு செய்தால் நீ 
மேற்கோள் காட்டுவது என்னைத்தானே 
அது மட்டும் ஏன் அப்பா... 

குழந்தை பருவத்தில் கதாநாயகனாய் 
தெரிந்த நீ 
வாலிபத்தில் எனக்கு பகைவன் போல் தோன்றினாய் 
என்று அதை நான் எண்ணிப்பார்க்கையில் 
என்மீது எனக்கு ஏளனம் தான் வருகிறது அப்பா... 

அன்று நீ என்னை அன்பாய் அழைத்து பேசியிருந்தால் போதும் 
உன் மகன் உத்தமன் என்று உன் உள்ளம் கூறியிருக்கும் அப்பா.... 

இன்று நான் ஒவ்வொன்றாய் எண்ணிப்பார்க்கிறேன் 
உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது ஒருவகையில் நியாயம் தான் அப்பா .. 

உன் ஒவ்வொரு பேச்சிக்கும் நான் எதிர் பேச்சு பேசியது நம் மகன் பாதை தவறுகிறானோ 
என நீ என்னும் வகையில் நான் பேசியதும் தவறுதானே.
ஒரு தகப்பனாக பிள்ளையை ஒழுக்கமாய் 
வளர்க்கவேண்டும் என எண்ணித்தான் நீ பேசினாய் என்பதை அப்பொழுது என் மனம் எண்ணவில்லையே அப்பா... 

அன்று நீ கூறியதை அன்பாய் கூறியிருந்தால் போதுமே .... 
இனிமேல் உன்னுடன் உனக்கு நல்ல மகனாய் நான் வாழவேண்டும் . 
உன்னோடு ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் என் வாழ்க்கை அமையவேண்டும் . 

நான் எழுதியதில் ஏதேனும் உன் மனதை 
புண்படுத்தியிருப்பின் எனக்காக 
அதை நீ மறந்து மன்னித்து விடு அப்பா ... 

இது உனக்காக மட்டும் எழுதிய கடிதம் 
உடல்நிலையை பத்திரமாக பார்த்துக்கொள்... 


இப்படிக்கு 
உன் அன்பு 
மகன்.

1 comment: