Welcome to our site.!!

Sunday, 3 April 2011

உலக அன்னையர் தினம் நண்பனின் வாழ்க்கை பாதையில்

உலக அன்னையர்  தினம்.உலகத்தில் இருக்கும் அனைத்து அன்னையருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகத்தில்  பிறந்த 
அனைத்து உயிர்களும் அம்மா என்று அழைக்காமல் எதுவும் இல்லை.
புராணத்தில் சொல்ல பட்ட கடவுள்களை நூலில்மட்டுமே படித்திருக்கின்றோம். 
ஆனால் எங்களை பத்து மாசம் சுமந்து எங்களை உருவாக்கிய தாயே நாங்கள் 
கண்முன் கண்ட தெய்வம்.எனவே ஒவரு மனிதனும் அவர்களின் அன்னையர்களை மதித்து அவர்களுக்கு  மகிழ்வுடன் பணிவிடைசெய்து அவர்களின் வாழ்வின் இறுதிகாலம் வரை வாழவைக்க வேண்டும்.இது எங்கள் கடமை.
எங்களை இந்த புனித நாளிலே எனது நண்பனின்,ஒரு  வழிகாட்டியின்  அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

நான் எனது சொந்த நாட்டில் இருந்து லண்டன்க்கு வந்த புதிதில் எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை.ஒரு தனிமை வாழ்க்கை.உறவினர்கள் பலர் இருந்தாலும் பணம் இருந்தால் மட்டுமே உறவு கொண்டாடும்
வெளிநாட்டில் நான்மட்டும் விதிவிலக்கு இல்லை.உறவுகள் இருந்தும் அனாதையாக பனிவிழும் தேசத்து வீதிகளில் தனிமையாக அலைந்து திரிந்தேன். பல நாட்கள் கடந்த நிலையில் என் தனிமை வாழ்க்கை.வீதிகளில் தனியாக அலைந்து திரிகிறது என்பவற்றை நீண்டகாலம் பார்த்த
ஒருவர் ஒரு நாள் என்னிடம் தானாக வந்து பேச்சுகொடுத்தார்.
முதலில் ஆங்கிலத்தில் பேசிய அவர் எனது விபரங்களை அறிந்து  எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றதும் அவருக்கு ஒரே சந்தோசம்    அவரும் அதே யாழ்ப்பாணத்தில் சாவகட்சேரி   என்னும் இடத்தில் பிறந்தவர் என்று
சொன்னார் பிறகு  நாங்கள் எங்களுக்குள் நட்பை வளர்த்து கொண்டோம்.

அந்த நண்பரின் பெயர் குறிப்பிட விருப்பம் இருந்தாலும் முடியவில்லை.மாஸ்டர் என்று வைத்து கொள்ளுவோம்.ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது தனது வாழ்க்கை அனுபவங்களை எனக்கு சொன்னார்.எனக்கு எனது கண்களை நம்பமுடியவில்லை.எனக்கு அவரை பெயர் சொல்லி அழைப்பதா சார் என்று அழைப்பதா என்று குழம்பியே போனேன்.அவரின் கடந்த காலம் அப்படி இருந்தது. எனது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

என் நண்பர்  இலங்கை தீவில் யாழ்ப்பாணம் என்னும் மாவட்டத்தில் இருக்கும் சாவகட்சேரி  என்னும்  ஊரில் ஒரு வறிய குடும்பத்தில் எழாவது மகனாக பிறந்தவர்.அவருடன் கூட பிறந்த சகோதரர்கள் ஒன்பது பேர்.எனினும் நண்பரின் தந்தையாரின் குடிபழக்கத்தால் குடும்பம்  மிகவும் வறுமையில் வாடியது. ஒரு வேலை சாப்பாட்டிக்கேனும் கையேந்தும் நிலையில் வாழ்ந்து வந்த பொழுதில் நண்பரின் தந்தையார் அவரது
குடிபழக்கத்தால் இளவயதில் இறந்து விட்டார்.நண்பரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.நண்பரின் தாயார் தனது பத்து பிள்ளைகளையும் வளர்க்க பெரிதும்  கஷ்டப்பட்டார்.வயல் வெளிகளில் வேலைக்கு
போய்மிகவும் கஷ்டபட்டு பிள்ளைகளை  வளர்த்து நன்றாக படிபித்தும்  
வந்துள்ளார்.தாயார் பட்ட கஷ்டத்தை சொல்லும் போது நண்பரின்
கண்களில் இருந்து கண்ணீர் அவரை அறியாமல் வந்தது.ஒரு கட்டத்தில்
குடும்ப வறுமையின் காரணமாக வளர்த்த நாயையே விற்று சாப்பிட்டார்கள் என்று சொன்னார் அதை கேட்ட எனக்கு மனதுக்குள் அழுகையே வந்தது.

ஒரு கட்டத்தில் நண்பரின் மூத்த சகோதரர் குடும்ப வறுமை தாங்காமல் வீட்டை  விட்டு ஓடி போய் தனது சகோதரர்களை தாயை மறந்து திருமணம் முடித்துள்ளார்.இதனால் என்  நண்பர் தன்   சிறு வயதிலும் அந்த குடும்பத்தை தாங்கி   வறுமையின் காரணமாக வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்து,தனது சகோதரர்களையும் வளர்த்து,தானும்  படித்து ஒரு பட்டதாரி ஆசிரியராக இருந்திருக்கிறார். 1986,1987 ஆண்டு காலத்தில் ஈழ     போராட்டம் வளர்ச்சியடைந்து  வந்த   காலம் அது  இவர் சாவகட்சேரி போலீஸ் நிலையத்துக்கு முன்னாள் டியூஷன் வகுப்புகளை கொடுத்து  வந்துள்ளார்.

பிறப்பில் இருந்து இவருக்கு கஷ்டபடும் மக்களுக்கு உதவும் குணம் இருந்திருக்கிறது. நாகர்கோவில் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து கலைக்கபட்ட வேளையில் மட்டுவில்,சாவகட்சேரி போன்ற
இடங்களில் குடியமர்ந்த வேளைகளில் உயர் சாதி வகுப்பினரால் நாகர்கோவில் மக்கள் புறம் தள்ள பட்டவேளைகளில் நண்பரும்
அவரை போல ஒரு சமூக நலனில் அக்கறை கொண்ட சில
நண்பர்களும் சேர்ந்து நாகர்கோவில் மக்களுக்காக போராடினார்கள்.
உயர் சாதி வகுப்பினரால் மூடப்பட்ட பாடசாலைகள் கோவில்கள்
என்பவற்றை உடைத்து மக்கள் தங்க இடம் அமைத்து கொடுத்துள்ளனர்.

இதனால் என் நண்பருக்கு அந்த காலத்தில் போராட்டத்தில்  ஈடுபட்ட தோழர்களுடன் நட்பு வளர்ந்து நண்பரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கியிருக்கிறார்.இதனால் இந்திய இராணுவமும்,இலங்கை இராணுவமும் என் நண்பரை கொல்ல தேடி கொண்டிருந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு என் நண்பரை அடையாளம் தெரியாது.இருந்தாலும் இலங்கை இராணுவம் அவரை பிடித்து கொழும்பில் ஒரு இடத்தில் கொல்லவதற்காக வைத்திருந்த சமயத்தில் அந்த முகாமிற்கு பொறுப்பாக இருந்து தமிழ் ஒட்டுக்குழுவின் உறுப்பினர் என் நண்பனின் மாணவன்.நண்பரை பற்றி அனைத்தும் தெரிந்த இந்த மாணவன் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு  அனுப்பியுள்ளார்.அந்த நேரத்தில் நண்பருக்கு சாவகட்சேரி மகளிர் இந்து கல்லூரியில் அதிபராக கடமையாற்ற அழைப்பு வந்திருந்தது .எனினும் தாயாரின் வேண்டுதலுக்கு இணங்க நண்பர் படகில் வெளிநாடு செல்ல முடிவெடுத்து


பிரித்தானியாவில் அகதியாக வந்து இறங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் நண்பரும்   ,இவருடன் படகில் வந்த தோழர்களுக்கும் தெரிந்தவர்கள் லண்டன் இல் இருக்கவில்லை இவர்கள்
வீதியில் நிற்பதை  கண்ட சிலர் அவர்களுக்கு தங்களுடன் கூட்டி சென்று தங்குமிட வசதி சாப்பாடு கொடுத்து உதவி செய்துள்ளனர்.அவர்களுக்கு உதவி செய்தவர்கள் விடுதலை போராட்டத்துக்காக புலம் பெயர் தேசத்தில் உழைக்கும் போராளிகள்.செய் நன்றி மறவாத என் நண்பர் தானும் அவர்களுடன் இணைந்து இன்று வரை ஈழ போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்.பல ஏமாற்றங்கள்,துரோகங்கள்,
அவமானங்களை தாண்டி எனது நண்பரும் அவரோடு இயங்கும்
தோழர்களும் விடுதலைக்காக இயங்கிகொண்டிருக்கிரார்கள்.தனது தாயாரின் இறந்த செய்தி கேட்டும் இறுதி சடங்கிற்கு கூட போக இயலாத
என் நண்பர் தனது தாயாரின் படத்தை ஒவருநாளும் காலையில்
 வணங்கி விட்டு தான் தனது வேலைகளை தொடங்குவார்.

தன் தாய் தன்னையும்,தன் சகோதரர்களையும் வறுமையில் வளர்த்து படிப்பித்ததை இன்னமும் மறவாமல்  நண்பர் வாழ்ந்து வருகிறார்.என் நண்பர் இறுதியில் சொன்னார் தான் கடவுளை கும்பிடுவது  இல்லை.என் தாயையே காலையில்  வணங்குகின்றேன் என்று.இன்று நண்பர் பிரித்தானியாவில் தமிழர்கள் மத்தியில்  முக்கிய பிரமுகர் இருந்தாலும் தன் கடந்த வாழ்க்கையையும்,பட்ட வறுமையையும் இன்னமும் மறக்கவில்லை. குறிப்பு-உலக அன்னையர்  தினத்தில் நாங்கள் எமது அன்னையரை ஒரு கணம் சிந்திப்போம்,முதியோர் இல்லத்தை முற்றாக ஒழிப்போம்.


6 comments:

  1. மறக்காம அம்மாவுக்கு போன் பண்ணிட்டேன்....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. லக்ஸ்மி அம்மா,நண்பர் மனோ தோழி பிரசா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்களுக்கும் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete